நெல்லை, குமரியில் மழை: குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

By KU BUREAU

நாகர்கோவில்/திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலையோரப் பகுதிகள், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2,460 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நேற்று உபரிநீர் திறப்பு 1,525 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதகு வழியாக 582 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டி உள்ளது. பெருஞ்சாணி அணையில் நீர் மட்டம் 70 அடியை தாண்டியுள்ள நிலையில் 1,638 கனஅடி தண்ணீர் வருகிறது. 510 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிக நீர் வெளியேறி வருவதால் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புத்தன்அணையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் குளிக்க நேற்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்கிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. குற்றாலம் அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 111.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,295 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 704 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுந்தது. பிரதான அருவியில் நேற்று சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE