கிருஷ்ணகிரி: தனியார் பள்ளியில் போலி பயிற்சி முகாம் நடத்தி, 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், கடந்த ஜூலை 11-ம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக எலிக்கு வைக்கப்படும் பசையைத் தின்று, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பும், அவர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேறு ஒரு தனியார் பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவந்த சிவராமன் இன்று (ஆக.23) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தந்தையும் உயிரிழப்பு: முன்னதாக சிவராமனின் தந்தை அசோக்குமார் (61), நேற்று இரவு 11.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினத்தில் இருந்து திம்மாபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மது போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் இருந்து வந்த காவேரிப்பட்டினம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
» பிஆர்க் மாணவர் சேர்க்கை: ஆக.26-க்குள் கல்லூரியில் சேர உத்தரவு
» ஆவடியில் ஒப்பந்த ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்த பகுதியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு
காவேரிப்பட்டினம் திம்மாபுரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சிவராமன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவராமனுடன் உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளனர்.