ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி கட்டப்பட்டதால் திறப்பு விழா காணவிருந்த பள்ளிவாசலுக்கு சீல்

By KU BUREAU

திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி கட்டப்பட்டதால், திறப்பு விழா காண இருந்த பள்ளிவாசலுக்கு வருவாய்த் துறையினர் `சீல்' வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள எஸ்.வி.ஜி.புரம் (சந்தானவேணு கோபாலபுரம்) கிராமத்தில், அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் சார்பில் சமீப காலமாக புதிய பள்ளி வாசல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்பணி முடிவுக்கு வந்ததையடுத்து, மஸ்ஜிதுஸ் சிராஜ் என்ற பெயரிலான அந்த பள்ளி வாசல் திறப்பு விழாவை நேற்று நடத்துவதற்கு திட்டமிட்டு, இஸ்லாமிய மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள நிலம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பூங்கொடி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலம் என்பதும், அதனை திருத்தணி கோட்டாட்சியரின் அனுமதியின்றி, மஜ்ஜித் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்தவர்கள், பூங்கொடியிடம் இருந்து கிரயம் பெற்றுள்ளது வருவாய்த் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊராட்சிகள் மற்றும் கட்டிடங்கள் விதிகளின் படி பள்ளிவாசல் அமைக்க மாவட்ட ஆட்சியரின் அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இலவச வீட்டுமனை பட்டா நிலத்தில் உரிய அனுமதியின்றி புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டதால், அதனை நேற்று முன் தினம் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் பாரதி தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி `சீல்’ வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE