2 மாதங்களுக்குள் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் மாளிகை அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: அடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர்தனது பணியில் தீவிரமாக உள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உரிய காலத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு ஜூலை31-ம் தேதி வரை 18 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முன் முயற்சிகளை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக பணிகளைகவனித்து வரும் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களில் அதாவது அக்டோபர் 31-ம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்புவிழா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் தாமதமின்றி தங்கள் பட்டங்களை பெற முடியும்.

நெட், ஜெஆர்பி தேர்வெழுதும் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துவதும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவதும் இம்முயற்சியின் நோக்கம் ஆகும். இதன்மூலம் மாணவர்கள் புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர முடியும்.

ஆராய்ச்சி காப்புரிமைகள்: மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆய்வுகளுக்கு காப்புரிமை பெறும் வகையில் குறிப்பாக ஸ்டெம் என அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்ஆகிய துறைகளில் காப்புரிமைபெறுதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு துணைவேந்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு மத்திய-மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, கடந்த 2021-22-ஆண்டு வெறும் 206ஆக இருந்த ஆராய்ச்சிகாப்புரிமைகளின் எண்ணிக்கை கடந்த 2023-24-ம் ஆண்டு 386 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவிலான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களில் உள்ள தமிழக உயர்கல்வி நிறுவனங்களை ஒருங்கே கொண்டுவந்து, அந்நிறுவனங்கள் தங்கள் அனுபவங்களையும் சிறந்த உத்திகளையும் அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுடன் பகிர்ந்துகொள்ளச் செய்யும் முயற்சியிலும் ஆளுநர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் ஆராய்ச்சிகாப்புரிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெட். ஜெஆர்எப்தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதோடு தமிழக பல்கலைக்கழகங்களின் தரவரிசையும் மேம்பட்டுள்ளது. இது உயர்தர ஆராய்ச்சியையும், தரமான கல்வியையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE