செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: தனியார் வங்கி மேலாளரிடம் குறுக்கு விசாரணை

By KU BUREAU

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான தனியார் வங்கி தலைமை மேலாளரிடம், செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 8-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகியிருந்தார். அமலாக்கத் துறை தரப்பில் ஏற்கெனவே சாட்சியம் அளித்திருந்த கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளரான ஹரிஷ்குமாரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமாரின் வங்கி கணக்கு விவரங்கள், வங்கி ஆவணங்கள், பணப்பரிவர்த்தனைகள், கவரிங் லெட்டர் தொடர்பான கேள்விகளுக்கு ஹரிஷ்குமார் பதிலளித்தார். இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு விசாரணையை நீதிபதி எஸ்.அல்லி ஆக.28-க்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE