உரிமை தொகையின்றி கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனது எழுத்து மற்றும் பேச்சுகளின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழக அரசுசார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மு.கருணாநிதி தமிழுணர்வு கொண்ட 14 வயது சிறுவனாக தம்இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15-ம் வயதில் `மாணவ நேசன்' என்ற கையெழுத்து ஏடு தொடங்கி,18-ம் வயதில் பேரறிஞர் அண்ணாவின் `திராவிட நாடு' இதழில் `இளமைப்பலி' என்ற அவரது முதற் கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தமது 23-ம் வயதில் `ராஜகுமாரி 'திரைப்படத்துக்கு முதன்முதலாக வசனம் எழுதினார். முதன்முதலில் `முரசொலி' என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942-ம் ஆண்டு வெளியிட்டார். 1960-ம் ஆண்டில் அதனைநாளிதழாக மாற்றினார்.

எண்பதாண்டு காலம் பொது வாழ்வு, 5 முறை முதல்வராக மக்கள்பணி மட்டுமல்லாமல் கருணாநிதி, 75 திரைப்படங்களுக்கு கதை,திரைக்கதை வசனங்களை எழுதியுள்ளார். 15 புதினங்களையும், 20நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.

மேலும், கருணாநிதி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக ரூ. 7.76 கோடியை தமிழக அரசு சார்பில் வழங்கி உத்தரவிட்டுள்ளார். கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE