விஜய் அரசியல் பரபரப்பு முதல் காஷ்மீர் தேர்தல் களம் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

தவெக கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்! - தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

விஜய் பேசும்போது, “இதுவரை நாம், நமக்காக உழைத்தோம். இனி கட்சி ரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம். இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன்” என்று பேசினார்.

விஜய் கட்சிக் கொடி அறிமுகம் - கட்சிகள் ரியாக்‌ஷன்: திமுக அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, “இது ஜனநாயகம் நாடு. இந்த நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கவும், கொடியை அறிமுகப்படுத்தவும், அந்த கொடியை ஏற்றவும் உரிமை உண்டு” என்றார். திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "திமுக எந்த சூழ்நிலையிலும் இதை ஒரு போட்டியாக நினைக்கவில்லை. இந்த மண்ணில் திராட இயக்கங்களின், பெரியாரின் தத்துவத்தை கொண்டு தான் ஒரு இயக்கம் முன்னேற முடியும் என்று விஜய் உணர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது" என்று தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "ஜனநாயக நாட்டில் இறுதி எஜமானர்கள் மக்கள்தான். எதுவாக இருந்தாலும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். மாநாட்டில் விஜய் என்ன பேசுகிறார் என்பதை வைத்துதான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்" என்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்ததகை கூறும்போது, "விஜய்க்கு எங்களுடைய வாழ்த்துகள். விஜய்யின் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், “ஜனநாயக நாட்டில் மக்கள் சேவைக்காக யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி துவங்கலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி கொடியை அறிமுகம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார். “தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறை முடங்கிப்போய் உள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய், முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக செயல்பட ஆவன செய்ய வேண்டும்,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.

விஜய் கட்சிக் கொடிக்கு பகுஜன் சமாஜ் எதிர்ப்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆனந்தன் வெளியிட்ட வீடியோ பதிவில், “விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி வன்கொடுமை சம்பவத்தில் விசாரணை தொடக்கம்: பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பல்நோக்கு குழு தனது விசாரணையை தொடங்கியது.

பத்லாப்பூர் வழக்கில் மும்பை ஐகோர்ட் காட்டம்: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் மூன்று மற்றும் நான்கு வயதே நிரம்பிய 2 பள்ளிச் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதில் காவல் துறை மெத்தனமாக நடந்துள்ளது. சிறுமிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் இதுபோன்ற மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டுமா?” என்று கருத்து தெரிவித்துள்ளது.

ஆந்திர மருந்து ஆலை விபத்து: ஆந்திர மாநிலம், அனகாபல்லியில் மருந்து தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உச்ச நீதிமன்றம் அறிவுரை: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. தொடர்ந்து, “மருத்துவர்கள் இல்லாமல் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு இயங்கும்? எனவே, மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்" என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள், டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

மோடியின் உக்ரைன் பயணமும் போலந்து பிரதமர் நம்பிக்கையும்: போலந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை சந்தித்துப் பேசினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று போலந்து பிரதமர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், “சுதந்திரத்துக்குப் பிறகு யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது ஜம்மு காஷ்மீரில்தான். ஜம்மு காஷ்மீர் மக்களை நான் நேசிக்கிறேன்.

மக்களவைத் தேர்தலின்போது இண்டியா கூட்டணி நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், இண்டியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார். வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்க வேண்டும் என்பதையே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி. வெறுப்பை அன்பினால் வெல்லலாம். மேலும், ஒற்றுமையின் மூலம் நாம் வெறுப்பை அன்பால் தோற்கடிப்போம்" என தெரிவித்தார்.

மாநில அந்தஸ்தே முக்கியம்: ஃபரூக் அப்துல்லா: காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் ஃபரூக், ஓமரை அவர்களின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “90 தொகுதிகளிலும் காங்கிரஸ் உடனான கூட்டணி இறுதியாகியுள்ளது. மாநில அந்தஸ்து என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அது எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE