குமரியில் தொடரும் மழை: குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2460 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரம் நிலையில் இன்று உபரிநீர் திறப்பு 1525 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் மதகு வழியாக 582 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டி உள்ளது. இதைப்போல் பெருஞ்சாணி அணையில் 70 அடியை தாண்டியுள்ள நிலையில் 1638 கனஅடி தண்ணீர் நீர்வரத்து உள்ளது. 510 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிக நீர் வெளியேறி வருவதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புத்தன் அணையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று 5வது நாளாக தடை விதிக்கப்பட்டது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் சப்பாத்து பாலத்தை ஆற்று வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. இதனால் பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் ஆறுகளின் வெள்ளம் அதிகரிக்கும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே ஆற்றின் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE