சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண சிறப்புக் குழு அமைக்க கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர்,"சத்தியஞான சபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் வழிபாட்டு தலத்திற்கு உரியது. எனவே இந்த இடத்தில் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது" எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"இது போன்ற தகவல்களை குற்றச்சாட்டுகளாகச் சொல்லாதீர்கள், இதில் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மாநில அரசின் பொறுப்பு ஆகும்.
கூட்டநெரிசலைத் தவிர்க்கவும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட குறைந்தபட்ச சுகாதார வசதிகளை செய்துதர வேண்டியது மாநில அரசின் கடமையாகும். வரும் காலங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசின் மீது தானே குறை சொல்வீர்கள். கோயிலுக்குப் பக்தர்கள் 106 ஏக்கர் நிலங்களைத் தானமாகக் கொடுத்த நிலையில், அரசு தரப்பில் 71 ஏக்கர் நிலம் மட்டுமே எப்படி உள்ளது" எனக் கேள்வி எழுப்பினர்.
» கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டன: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
» 'குமாரசாமியை கைது செய்ய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் போதும்' - சித்தராமையா கிண்டல்
அப்போது இந்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 1938-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை இந்தக் கோவிலை கட்டுப்பட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டார். 6.5 ஏக்கர் நிலத்தை ஆகிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும், மேலும், 27 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் சுட்டிகாட்டினார். ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதலால் தான் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து 1 மாதத்திற்குள் அடையாளம் காண வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.