சிதம்பரம் வக்காரமாரி குளத்தில் இருந்து வெளியேறிய முதலைகள் - கிராம மக்கள் அச்சம்

By க. ரமேஷ்

சிதம்பரம் நகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் வக்காரமாரி குளம் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் கிராம பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்தில் காட்டுக்கூடலூர் கிராம பழைய கொள்ளிடம் பகுதியில் பிடிக்கப்பட்ட முதலை.சிதம்பரம் நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1915-ம் ஆண்டு அண்ணாமலை செட்டியார் ஒரு திட்டத்தை நகராட்சிக்கு வழங்கினார்.

அதாவது, சிதம்பரம் அருகே வக்காரமாரி என்ற பகுதியில் இரு பெரிய குளங்களை வெட்டினார். இந்த குளங்களுக்கு வடக்குராஜன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் வகையில் வழிவகை செய்யப்பட்டது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் இரு குளங்களிலும் தேக்கப்பட்டது. பின்பு அந்த நீரை பம்பிங் செய்து, சுத்தப்படுத்தி, சிதம்பரம் மேலவீதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்துக்கு அனுப்பி, நகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

குடிநீர்குளம் என்பதால் மனிதர் கள், கால்நடைகள் இறங்குவதை தடுக்கும் வகையில், அச்சத்தை ஏற்படுத்த சில முதலைகளை அப்போது அதில் விட்டனர். தொடர்ந்து ஆண்டு முழுவதும் இந்தக் குளத்தில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் ஆறு, வாய்க்கால் குளங்களிலும் பிடிபடும் முதலைகளை வனத்துறையினர், வக்காரமாரி குளத்தில் விடுவதையே வழக்கமாக வைத்தனர்.

இதனால் இந்தக் குளங்களில் எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் இரு குளங்களை யும் தூர்வாரி கரைகளை பலப்படுத்த நகராட்சி சார்பில் ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

முதல் குளத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் தொடங்கியபோது, முதலைகள் அருகில் உள்ள குளத்திற்கு சென்றன. ஒரு குளத்தின் பணிகள் முடிந்து, அடுத்த குளத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் தொடங்கியதால் அங்கிருந்த முதலைகள் அனைத்தும், அடுத்தடுத்த நாட்களில் இரவோடு, இரவாக வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் உள்ள பிற நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன.

சில முதலைகள் பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தஞ்சமடைந்துள்ளன. இதனால் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், தங்கள் பகுதி நீர்நிலைகளுக்கு முதலைகள் வந்திருக்குமோ! என்ற அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் கூட காட்டுக்கூடலூர் பழைய கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிப்பதற்காக கட்டப்பட்ட இரும்புக் கூண்டில் தஞ்சமடைந்த பெரிய முதலை வனத்துறையால் பிடிக்கப்பட்டது.

குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கும் முன்பே, முதலைகளை பாதுகாப்பது குறித்து வனத்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததே முதலைகள் இப்படி வெளியேறி வருவதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆவலர்கள். இதனால், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நீர்நிலைகளை ஒட்டியிருக்கும் கிராம மக்கள், நமது பகுதிக்குள் முதலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கெனவே சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் முதலை கடித்து, மனித உயிரிழப்பு, கால்நடைகள் உயிரிழப்பு தொடரும் நிலையில், காணாமல் போன முதலைகளால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.

இப்பகுதியில் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை நடைமுறைப்படுத்தினால், முறையற்று திரியும் இந்த முதலைகளை கட்டுப்படுத்தலாம். மேலும், முதலைப் பண்ணை அமையும் பட்சத்தில், சிதம்பரம், பிச்சாவரம் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்தி ழுக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE