மனு அளிக்க வந்து காத்துக் கிடந்தவர்களது கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட ஆட்சியருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக உயர் கல்வித்துறை துணைச் செயலாளராக இருந்த தர்ப்பகராஜ் கடந்த மாதம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இடமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த ஜனவரி 29-ம் தேதி அவர் அங்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று முதல் அவர் தனது அதிரடியைக் காட்டி வருகிறார்.
கடந்த ஒரு வாரக் காலமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று சத்தமே இல்லாமல் ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு நேரிடையாக மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.
அந்த வகையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திடீரென அவர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக வளாகத்தில் திருப்பத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கக் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை, பார்த்த ஆட்சியர் முதியவர் ஒருவரை அழைத்து, அவர் எதற்காக வந்துள்ளார் எனக் கேட்டறிந்தார். அதற்கு, அந்த முதியவர் அருகில் உள்ள நெல்லிவாசல் நாடு பகுதியிலிருந்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்.
இதைக்கேட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணனை அழைத்து, முதியவரின் மனுவை வாங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதே போல் வட்டாட்சியர் அலுவலகம் வெளியே வரிசையாக நின்று கொண்டிருந்த அனைத்து மனுதாரர்களையும் அழைத்து விசாரித்தார்.
அப்போது மனுதாரர்கள் அனைவரும் பல மாதங்களாக நடையாக நடக்கிறோம், எந்த பயனும் இல்லை என ஆதங்கம் தெரிவித்தனர். உடனடியாக வருவாய்க் கோட்டாட்சியர் பானு மற்றும் வட்டாட்சியர் என அனைவரிடமும் உடனடியாக அவர்கள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டர்.
இதேபோல், ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாகக் கடந்த 5-ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு மாணவி, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை மற்றும் சக்கர நாற்காலி வேண்டுமென மனு அளித்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட 10 நிமிடத்திலேயே மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாணவிக்குச் சக்கர நாற்காலி வழங்கினார். அதேபோல், திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மனு அளித்த அன்றே, அவருக்கு அரசு விடுதியில் இடமும், துணிகளும் வாங்கித்தர வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இப்படி பொறுப்புக்கு வந்த சில தினங்களிலேயே தனது அதிரடி நடவடிக்கையால் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள ஆட்சியர் தர்ப்பகராஜூக்கு, பலரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!