டெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன், டெட் பட்டதாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுமென, டெட் தேர்வு பட்டதாரிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் டெட் தேர்வுக்கு பிறகு வேலைவாய்ப்பு பெற மற்றொரு போட்டித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இதனிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையில் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதே அரசாணையை பின்பற்றி போட்டி தேர்வு குறித்த அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி அரசு பள்ளிகளில் 2,222 பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டி தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் எனவும் இதற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 1-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெட் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் டெட் பட்டதாரிகள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனை டெட் பட்டதாரிகள் சங்கத்தினர் ஏற்காத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனிடையே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட போட்டித்தேர்வு அறிவிப்பிற்கு தடையாணை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டெட் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!