வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

By காமதேனு

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் உள்ள ஒரே நபர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து நீக்க வேண்டும் என்று சம்விதான் பச்சாவோ டிரஸ்ட் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பெயர் நீக்கம், சேர்ப்பு ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை அளித்துள்ளது.

தேர்தல்

'மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்கள் நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக 2.68 கோடி பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.மேலும் 1.66 கோடி நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி நாட்டில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அசாம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தவிர்த்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் அங்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபர்களில் இறந்தவர்கள் விவரம், நிரந்தரமாக வீடு அல்லது ஊர் மாறியவர்கள் விவரம், பெயர் நீக்கப்பட்ட நபர்களின் விவரங்களை தனித்தனியாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE