தமிழக - கேரள எல்லையான போடிமெட்டு மலை பாதையில் பாறை சரிவுகள் தொடர்ந்து அதிகரிப்பு

By KU BUREAU

போடி: தேனி மாவட்டத்தில் தமிழகம்-கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமான போடிமெட்டு மலைப் பாதை, 17 கொண்டை ஊசி வளைவுகளுடன், 4,500 அடி உயரம் வரை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இங்கு மண் மற்றும் பாறை சரிவுகள் அதிகம் இருக்கும்.

தற்போது இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தினமும் மழைப்பொழிவு இருப்பதால், மலைப் பாதையின் இருபுறமும் உள்ள மண் மற்றும் கற்பாறைத் திட்டுகள் அதீத ஈரத்தன்மையுடன் உள்ளன. இதனால் பல இடங்களிலும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. நேற்று மட்டும் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இரவு, அதிகாலையில் பாறை சரிவு ஏற்பட்டதால், பாதிப்பு எதுவும் இல்லை. கடந்த சில நாட்களாக பாறை சரிவு அதிகரித்துள்ளதால், வாகனங்கள் செல்லபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.

இரவில் பயணிக்க வேண்டாம்: இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “மலைப் பாதையில் ஆங்காங்கே லேசான மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல் வோர் மீது நேரடியாக மண், பாறைகள் விழும் அபாயம் உள்ளது.

எனவே, கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். மேற்கூரை திறக்கும் வசதி (சன் ரூஃப்) கொண்ட காரில் செல்பவர்கள், நின்றபடி பயணிக்க வேண்டாம். இயற்கையை ரசிப்பதற்காகவோ, புகைப்படம் எடுக்கவோ இந்த மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். மேலும், இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE