கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

By காமதேனு

பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய அதே நாளில், பாமக தலைவர் அன்புமணியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசி பாஜக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி.கே.வாசன்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு, அந்த கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதா அல்லது பாஜகவுடன் கூட்டணி வைப்பதா என்று தெரியாமல் தவித்து வருகின்றன. அதிமுக மற்றும் பாஜக இரண்டு தரப்பிலிருந்தும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணியில் இணைய கடும் நெருக்கடிகளும், ஆஃபர்களும் கொடுக்கப்படுகிறது.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை எப்படியும் தங்கள் கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதைத் தெரிந்துகொண்ட அதிமுக, தேமுதிக மற்றும் பாமகவை கூட்டணிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அவர் பேசியதாக செய்திகள் வெளியானது.

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை அன்புமணியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். பாஜகவின் தூதுவராக அதிமுகவை சந்தித்து பாஜக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்த வாசன் தற்போது பாமக தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

அன்புமணியின் தந்தையை சந்தித்து அதிமுக அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவார்களோ என்று பயந்த பாஜக ஜி.கே.வாசனை அனுப்பி அன்புமணியை சந்தித்து பாஜக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இப்படி பாஜக, அதிமுக இரண்டு தரப்பிலிருந்தும் அழைப்பு வருவதால் யாருடைய அழைப்பு ஏற்று கூட்டணி வைப்பது என்று பாமக குழம்பி வருகிறது. இதேபோல தேமுதிகவுக்கும் இரண்டு தரப்பினரும் கூட்டணிக்கு அழைப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE