தமிழகத்தில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றுடன்(அக்.31) நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது.
துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.