காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி பெண் ஒப்பந்த ஊழியர் பரிதாப உயிரிழப்பு

By KU BUREAU

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, நாள் தோறும் சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல், 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், முகவர்களுக்கு பால் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பணியில், தரம்பிரித்து, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் நிரப்பப்பட்ட பால், இயந்திரத்தில் இருந்து கன்வேயர் பெல்ட்டில் வெளியே வரும்போது, அதனை டப்பில் அடுக்கும் பணியில், ஒப்பந்த ஊழியரான உமாராணி (30) ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவித மாக உமாராணி அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவும், அவரதுதலைமுடியும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கின. இதில் உமாராணியின் தலை இயந்திரத்தில் சிக்கி துண்டாகி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உமாராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தஉமாராணியின் கணவர் கார்த்திக்,காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், காக்களூர்- பைபாஸ் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ளஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தநிலையில், உமாராணி, கடந்த 6 மாதங்களாக ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வருண்குமாரை நேற்றுதிருவள்ளூர் தாலுக்கா போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர், காக்களூர் பால் பண்ணையில் உயிரிழந்த பெண் ஒப்பந்த ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்வழங்கவும், அவரின் குழந்தைகளின் கல்விக்கு தேவையான உதவிகளை செய்யவும் ஆணையிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பணி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயிரிழந்த உமாராணிக்கு சேர வேண்டிய இபிஎஃப், இஎஸ்ஐ மற்றும் இழப்பீடு தொகை ஒப்பந்ததாரர் மூலம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உமாராணி குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இரவு பணி பொறுப்பாளராகிய ஆவின் நிறுவன துணை மேலாளர் (பால்பதம்) அஜித்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இயந்திர பிரிவு பொறுப்பாளராகிய மேலாளர் (பொறியியல்) அகிலேஷ் ராஜா, இரவு கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் அலுவலர்கள் துணைமேலாளர் விக்னேஷ், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்கள் கமல்சிங், சுரேஷ், அருண்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE