91-ம் ஆண்டில் அடியெடுத்துவைத்த மேட்டூர் அணை: நீர்மட்டம் 119.76 அடியாக சரிந்தது

By KU BUREAU

மேட்டூர்: மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவு பெற்று 91-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தில் 700 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

காவிரியைத் தேக்கிவைக்க வழியில்லாததால், பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் அரசு மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்தது. இதற்கான கட்டுமானப் பணிகள் 1925-ல் தொடங்கின.

வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணையைக் கட்டும் பணியில் ஈடுபட்டனர். 1934 ஜூலை 14-ம்தேதி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அணை கட்டுவதற்கான செலவு ரூ.4.80 கோடி. 1934 ஆகஸ்ட் 21-ம் தேதிசென்னை கவர்னராக இருந்த ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடியாகும். அணையின் நீர்த்தேக்கப் பகுதி 59.25 சதுர மைலாகும். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டிஎம்சி. அணையில் 120 அடி உயரம் தண்ணீரை சேமிக்கலாம்.

பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விட அணையின் நீர்மட்ட அளவைப் பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டுமின் நிலையங்களும் உள்ளன. அதேபோல, உபரிநீரை திறப்பதற்காக 16 கண் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 20 அடிஉயரம், 60 அடி அகலம் கொண்டவை. உபரி நீர் திறக்கும் 16 கண்மதகுக்கு, அணையின் கண்காணிப்புப் பொறியாளராக இருந்தகர்னல் எல்லீஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12மாவட்டங்களில், சுமார் 17 லட்சம்ஏக்கர் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934-ம் ஆண்டு தொடங்கி, உரிய தேதியான ஜூன் 12-ம் தேதி 19 முறையும், உரிய தேதிக்கு முன்னதாக 11 முறையும், காலதாமதமாக 61 முறையும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணை தனது 91-வது ஆண்டில் நேற்று அடியெடுத்துவைத்தது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,563 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்இருப்பு 93.08 டிஎம்சி: நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்புஅதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கிஉள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து நேற்று 119.76 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து 93.08 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE