சாயல்குடி அருகே கடல் சீற்றத்தால் கடலுக்குள் சென்ற சவப்பெட்டிகள்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே கடல் சீற்றத்தால் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோச்மா நகர் கடற்கரை கல்லறை தோட்டத்தில் இறந்த கிறிஸ்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக கடல் சீற்றத்தால் மண் அரிமானம் ஏற்பட்டு எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்தது. மீனவர்கள் மற்றும் கிராம மக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர்

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி, தனுஷ்கோடி, மூக்கையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ரோச்மாநகர் பகுதியில் சில நாட்களாக கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்ரையோரம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித உடல்களின் மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகள், சவப்பெட்டிகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. புதன்கிழமை காலையில் மூன்றுக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அக்கிராம மக்கள் கூறினர். எனவே, அரசு உடனடியாக கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு மற்றும் கரையோரம் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரிகளை முற்றுகையிட்ட மீனவ கிராம மக்கள் ரோச்மா நகர் கடற்கரையில் கடந்த ஓராண்டாக கடல் அரிப்பு ஏற்பட்டு எலும்புக்கூடுகள் தெரிந்த நிலையில் பலமுறை அதிகாரிகள் பார்வையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று சவப்பெட்டிகள் கடலில் மிதந்ததால், கிராம மக்கள் ரூ.3 லட்சம் நிதி சேர்த்து நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் தயார் செய்து கடற்கரையில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இதனையறிந்து கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட சென்றனர். அவர்களை பெண்கள், மீனவர்கள் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் தடுத்து முற்றுகையிட்டனர். தயவுசெய்து எங்கள் கிராமத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிகாரிகள் வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE