நீலகிரி மாவட்ட திமுக கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு அமைச்சர், எம்.பி ‘டோஸ்’ விட்டதால் சலசலப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்ட திமுக கூட்டத்தில் கவுன்சிலர்களை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், எம்பி ஆ.ராசா கடிந்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்ட திமுக கூட்டம் உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட அவை தலைவர் போஜன், தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார்.

கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசியதாவது: "நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல, வரும் சட்டபேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும். மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்ட கூடாது.

அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் இருந்தாலும், அவர்கள் வார்டில் உள்ளவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கும் வகையில், வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும். கவுன்சிலர்களின் செயல்பாடுகளில் முதல்வருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், கவுன்சிலர்கள் சரியாக பணியாற்றி மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும். நெள்ளியாளம் நகராட்சி தலைவரை திமுக ஒப்பந்ததாரர் மிரட்டுகிறார்.

அவரை பற்றி தவறான செய்திகளை வெளியிட செய்கிறார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்சியில் சேர்ந்தார். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். கட்சிக்கு அவபெயர் ஏற்படுத்துபவர்களையும், ஆதாயத்துக்காக கட்சியில் இணைந்தவர்களை பராபட்சமின்றி நீக்க வேண்டும். விசுவாசமான கட்சியினர் தான் வெற்றிக்காக கள பணியாற்றுவார்கள்" என்று ராமசந்திரன் கூறினார்.

எம்பி ஆ.ராசா பேசும் போது,"அண்ணா, கருணாநிதி ஆகியோர் தங்களது காலத்தில் தனித்தனி பிரச்சினையை எதிர்த்து போராடினர். தற்போது ஸ்டாலின், ஒரே நேரத்தில் ஜனநாயக படுகொலை, இறையாண்மை, இந்தி திணிப்பு, மதவாதம் ஆகிய பல பிரச்சினைகளை எதிர்த்து போராடி, ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறார். அவரது உழைப்பால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் வென்றுள்ளோம்.

பெரும் சவாலை ஏற்றுக்கொண்டு இந்திய மதசார்பற்ற நாடு என மதவாத மோடியை அடக்கும் அங்கூசமாக உள்ளார் ஸ்டாலின். சட்டப்பேரவை தேர்தலுக்கு 2 ஆண்டுகள் கூட இல்லை. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்காக மகளிர், மாணவர்கள், என அனைவரும் பயன்பெறும் திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் சொந்த பிரச்சினைகளுக்காக சென்னைக்கு ஓடி வருகிறீர்கள். என்றாவது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக வந்திருக்கிறீர்களா. மக்கள் பிரதிநிதிகளுக்கான அங்கீகாரத்தை கட்சி தான் வழங்கியுள்ளது. அதை அனைவரும் மனதில் கொண்டும் பணியாற்ற வேண்டும். வரும் 2026-ம் ஆண்டு மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க பாடுபட வேண்டும்" என்று எம்பி ஆ.ராசா கூறினார்.

கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் கட்சியின் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்துவது குறித்தும், மாவட்டத்திலுள்ள கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார். கூட்டத்தில், துணை செயலாளர் ரவிகுமார், நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE