சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை செயல்படுகிறது. இத்துறையில் பணிபுரிவோர் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை நிலை போன்ற பல்வேறு தகவல்களை சேகரித்து திட்டத்துறை மற்றும் அரசுக்கு வழங்கும் பணியை செய்கிறது. அரசின் பிற துறைகளை போன்று இத்துறையிலும், பணியில் சேருவோருக்கு குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 3 ஆண்டுக்கு மேலாகவே உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் போன்ற உயர் பதவி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இத்துறையில் பணி புரியும் உயர்மட்ட அதிகாரிகளின் பாரபட்ச போக்கு, குளறுபடிகளுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்மூலம் அரசுக்குரிய புள்ளி விவரங்கள் சேகரித்தல் பணியிலும் தொய்வு நிலையே உள்ளது என பாதிக்கப்பட்ட புள்ளியல் துறையினர் புலம்புகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்,"அரசுக்கு தேவையான ஒட்டுமொத்த அனைத்து புள்ளி விவரங்களை எங்களது துறை சார்ந்தவர்களே சேகரித்து வழங்குகிறோம். கடந்த 3 ஆண்டாகவே பதவி உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களால் பாதிக்கப்படுகிறோம். தமிழகளவில் கடந்த ஓராண்டில் மட்டும் உதவி இயக்குநர்கள் - 30, துணை இயக்குநர்கள் -13, இணை இயக்குநர்கள் -3, கூடுதல் இயக்குநர்-1 என காலியாக உள்ளது. உரிய கல்வித்தகுதியுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணியாற்றுவோர் பாதிக்கப்படுகிறோம்.
போதிய கல்வித் தகுதி இல்லாத ஒரு சிலர் பதவி உயர்வு பெற முடியாத சூழலில், அவர்கள் தூண்டுதலில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், இத்துறையினர் கல்வி, காவல்துறை உள்ளிட்ட அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் வாய்ப்புள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்களை திரும்ப பெறப்பட்டுள்ளன. பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும் தகுதி இறக்கமும் சிலர் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற குளறுபடிகளை தொடர்வதால் இத்துறையில் பதவி உயர்வு, காலியிடங்களும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. மேலும், இத்துறையின் உயர் பதவியில் இருக்கும் ஓரிருவர் சமூக ரீதியிலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் தகுதி இருந்தும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறோம். புள்ளி விவரம் சேகரிக்கும் எங்களுக்கே பதவி உயர்வு என்பது கனவாக உள்ளது. மாநில அரசு கவனத்தில் எடுத்து தகுதியுடைவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலியிடங்களை நிரப்ப வேண்டும்" என்று அதிகாரிகள் கூறினார்.