முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு: இரங்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பாகும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியில் உள்ள கே.ஜி.ரமேஷ் இல்லத்தில் இரங்கல் கூட்டம் மற்றும் கே.ஜி.ரமேஷ் உருவப்படம் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கே.ஜி.ரமேஷ் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பிறகு, அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது,"மறைந்த கே.ஜி.ரமேஷ் கிளைச் செயலாளராக இருந்து, அதன் பிறகு ஒன்றியக்குழு உறுப்பினர், பிறகு, கந்திலி ஒன்றியக்குழு பெருந்தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.ஜி.ரமேஷ் தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். மக்களிடம் எளிமையாக பழகக்கூடியவர். அனைவரிடமும் அன்பு செலுத்துவார். அவரது இழப்பு என்பது குடும்பத்தாருக்கு மட்டும் இல்லை, அதிமுகவுக்கே பேரிழப்பாகும். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. 15 ஆண்டுகள் ஒன்றியச் செயலாளராக இருந்து கட்சிப்பணி ஆற்றிய கே.ஜி.ரமேஷின் திடீர் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தலாம்’’ எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்), செந்தில்குமார் (வாணியம்பாடி), மாவட்டச் செயலாளர்கள் வேலழகன், சுகுமார், எஸ்.ஆர்.கே.அப்பு, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE