திருப்புவனத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: தடுத்து நிறுத்தியதால் போலீஸாருடன் வாக்குவாதம்

By இ.ஜெகநாதன்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியார் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எம்ஜிஆர் நகர் பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டு போராடி வருவருதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர்கள் வசிக்கும் இடம் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர்களுக்கு பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்து அந்த இடத்தை மீட்க வேண்டும். தொடர்ந்து அங்கு வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை இல்லாத நிலையில், இன்று பட்டா கேட்டு எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நல உரிமைச் சங்கத்தினர் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை ஒன்றிய அலுவலகம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸார், பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE