அரியலூர்: கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவரது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரியில் சேர்த்து விட்டு திருச்சியில் இருந்து பயணிகள் ரயிலில் தந்தையும் இரு மகள்களும் செந்துறைக்கு நேற்றிரவு (ஆக.20) சென்றுள்ளனர்.
செந்துறை ரயில் நிலையத்தில் இறங்கிய மூன்று பேரில், இளைய மகள் தேவி நேரடியாக ரயில் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலைய வாசலுக்கு சென்றுள்ளார். கால்கள் சரிவர நடக்க முடியாத நிலையில் உள்ள பிச்சைபிள்ளையை, மூத்த மகள் பழனியம்மாள் ரயில்வே நடைபாதையில் நடந்து அழைத்து சென்று, சாய்வு தளத்தில் இறங்கி, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் .
அப்போது எதிரே திருச்சி நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்த நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டு பழனியம்மாள் செய்வது அறியாது திகைத்து நின்றார். அப்போது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் விரைவு ரயில் மோதியதில், உடல் சிதறி பரிதாபமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும் அக்காவும் ரயில் அடிபட்டு உடல் சிதறி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
» மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணியின்போது இரும்பு கயிறு அறுந்து தொழிலாளி உயிரிழப்பு
» காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அரசு கைவிட கோரும் டாஸ்மாக் ஊழியர்கள்
விபத்து குறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸார், விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.