காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அரசு கைவிட கோரும் டாஸ்மாக் ஊழியர்கள்

By KU BUREAU

சிவகங்கை: காலிப் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலக்குழுக் கூட்டத்தில் அதன் மாநிலத் தலைவர் பொன்முடி பொதுச் செயலாளர் திருச்செல்வம், மாவட்டத் தலைவர் திருமாறன், செயலாளர் குமார், பொருளாளர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின், திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போன்று ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். பள்ளத்தூரில் பணியின் போது கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அர்ஜூனன் மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணி இதுவரை வழங்கவில்லை. உடனடியாகப் பணி வழங்க மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முழுமையாகப் பலனளிக்கவில்லை.

எங்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊழியர்களின் சிரமத்தை அறியாமல் காலிப் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.

அதைக் கைவிட வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE