தமிழக மக்களை பாதிக்கும் எந்த விவகாரத்திலும் சமரசம் செய்ய மாட்டோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் உறுதி

By KU BUREAU

விருதுநகர்: தமிழக மக்களைப் பாதிக்கும் எந்த விவகாரத்திலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவற்றைத் தடுக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும். அருந்ததிய சமூகத்தினருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்றுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது வரவேற்கத்தக்கது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காகவும், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றும் திண்டுக்கல்லில் ஆக. 29-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளோம்.

தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதை கைவிட்டு, நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலை, மதுரை சர்க்கரை ஆலை, கூட்டுறவு நூற்பாலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக அரசுதான் காரணம். ரேஷன் கடைகளில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் போராட்டம் நடத்துவோம். தமிழக மக்களைப் பாதிக்கும் எந்த விவகாரத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE