தமிழக பாஜகவில் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்கள் திடீர் திடீரென கட்சியைவிட்டு விலகுவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில், திமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் செல்வம், டாக்டர் சரவணன், வி.பி.துரைசாமி என பல பிரபலங்கள் பாஜகவில் இணைந்து பரபரப்பைக் கூட்டினர். நடிகை காயத்திரி ரகுராம், நடன இயக்குனர் கலா, நடிகர் விக்னேஷ், குட்டி பத்மினி என திரை பிரபலங்களும் வரிசையாக கமலாலய பிரவேசம் செய்தனர். இதையெல்லாம் அண்ணா அறிவாலயமும், எம்ஜிஆர் மாளிகையும் வியந்து பார்த்தது. அந்தளவுக்கு தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி இருந்தது.
இவை எல்லாம் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட காலத்தை ஒட்டி நடந்த நிகழ்வுகள். மாற்றுக் கட்சியினர், திரை பிரபலங்கள் எல்லாம் பாஜகவுக்கு வந்தது அண்ணாமலைக்கும் பெருமை சேர்த்தது. ஆனால், வந்தவர்களை எல்லாம் வாஞ்சையாக அழைத்துக்கொண்ட அண்ணாமலை ஏற்கெனவே இருக்கிற பாஜக மூத்த முன்னோடிகளை அவ்வளவாக மதிப்பதில்லை; அவர்களுக்கான மரியாதையும் அவரிடம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பம் முதலே வெடித்தன.
அண்ணாமலையின் வளர்ச்சி எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதற்கு கொஞ்சமும் குறையில்லாத வகையில் அவர் மீதான விமர்சனங்களையும் பாஜகவினரே பட்டியல் போட்டார்கள். காலம் காலமாக கட்சியில் இருந்தவர்களை விட்டுவிட்டு புதிதாக ஒருவரை இறக்குமதி செய்து அவரை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்ததும் அவர்களிடையே ஒரு அங்கலாய்ப்பாக இருந்தது.
இதுபோன்ற காரணங்களால் தமிழக பாஜகவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோஷ்டி பூசல்கள் அப்பட்டமாகவே வெளியில் தெரிய ஆரம்பித்தன. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகனுக்கும் அண்ணாமலைக்குமே ஒத்துப்போகாத நிலை உருவானது.
கமலாலயத்தில் அண்ணாமலைக்கு என பிரத்யேகமாக ஒரு வார்ரூம் இயங்குகிறது. அந்த வார் ரூம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், முன்பு காயத்ரி ரகுராம் பாஜகவுக்கு குட்பை சொன்னார். அடுத்ததாக இப்போது நடிகை கெளதமியும் பாஜகவில் இருந்து விலகுவதாக வேதனையுடன் அறிவித்திருக்கிறார். காயத்ரியாவது இன்றைக்கு வந்தவர். கௌதமி 1998 முதல் 25 ஆண்டு காலமாக பாஜகவில் இருந்தவர். இவரது விலகலானது அண்ணாமலையின் தலைவர் பதவிக்கே சவாலாய் வந்து நிற்கிறது.
இதற்கு முன்பு நடிகர் எஸ்.வி.சேகர், டாக்டர் சரவணன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் அண்ணாமலைக்கு எதிராக குற்றப்பத்திரிகை வாசித்தார்கள். காயத்ரி ரகுராம் பாஜகவைவிட்டு போய்விட்டாலும் இன்னும் அண்ணாமலையை தாக்குவதை விடவில்லை. எஸ்.வி.சேகரோ மோடி அபிமானியாக பாஜகவில் இருந்து கொண்டே தைரியமாக அண்ணாமலையை போட்டுத்தாக்கிக் கொண்டே இருக்கிறார்.
தன்னுடை விலகலுக்கு கடிதம் மூலம் காரணம் சொல்லி இருக்கும் கௌதமி, “என்னுடைய வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத இன்னல்கள் இருக்கின்றன. கட்சியிடமிருந்தோ, அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கைச் சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்துவருவது குறித்து எனக்கு தெரிய வந்திருக்கிறது.
நானும், என் மகளும் பாதுகாப்பாக செட்டிலாகவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். 25 ஆண்டு காலம் கட்சிக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு கட்சிக்குள் முற்றிலுமாக ஆதரவு இல்லை. என்னை மோசடி செய்த நபருக்கு சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன்” எனச் சொல்லி இருக்கிறார்.
கெளதமி கொட்டி இருக்கும் இந்த ஆதங்க வார்த்தைகள் அண்ணாமலையையும் அதிர வைத்திருக்கிறது. இது தொடர்பாக பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனிடம் பேசினோம். “கௌதமி மீது எனக்கு அன்பு, பாசம், மரியாதை உண்டு அவர் கட்சியில் தீவிரமாக உழைக்கக்கூடியவராக இருந்தார். கட்சியை நேசிக்கக் கூடியவராக இருந்தார். அவர் கடிதம் அளித்திருப்பது மன வேதனையாக இருக்கிறது. மகளிர் அணியில் இணைந்து பணியாற்ற அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால், அவர் மாநிலத்தில் வேலை செய்வதாகச் சொல்லி இருந்தார். மாநில பணிகளில் அவருடன் பேச, பழக எனக்கு வாய்ப்பு குறைந்து போனது.
தான் ஒரு சினிமா நட்சத்திரம், தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எப்போதும் நினைக்காதவர் கௌதமி. கட்சியின் அடிப்படை தொண்டராக இருந்த அவரது கடிதம் மன வேதனையைக் கொடுக்கிறது. தனிப்பட்ட பெண்மணியாக அவர் எதிலும் சோர்ந்து போகக்கூடிய ஆள் கிடையாது. தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்மணி.
ஒரு வழக்கு தொடர்பாக கட்சியில் ஒரு சிலரை பாதுகாப்பதாகச் சொல்லி இருக்கிறார். முழுமையான தகவல் தெரியவில்லை. கட்சி யாரையும் பாதுகாக்காது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுதான் பாஜக. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் நடவடிக்கை எடுப்பார். கெளதமிக்கு எந்த உதவியாக இருந்தாலும் அதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்’’ என்றதோடு முடித்துக் கொண்டார் அவர்.
இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராமிடம் கேட்டதற்கு, “கடின உழைப்பாளிகளுக்கு பாஜகவில் இருக்க தகுதி இல்லை. ரவுடிகள், பண மோசடி செய்பவர்கள், ஜால்ராக்கள், பாலியல் குற்றவாளிகள், போதை பொருள் விற்பனையாளர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள், மனைவியை விவாகரத்து செய்தவர்கள், அல்லது கொன்றவர்கள் - இதுமாதிரியான ஆட்களுக்கு மட்டும்தான் அந்த கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். வார்ரூம் கும்பலை வைத்து அண்ணாமலை போடும் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்.
அம்மா கெளதமி அவர்கள் தமிழக பாஜக குறிப்பாக, அண்ணாமலையின் உண்மை முகத்தை தெரிந்து அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளதை நான் மனதார வரவேற்கிறேன். அவர்களின் இந்த தெளிவான முடிவை வருங்காலத்தில் பாஜகவில் உள்ள அத்தனை மகளிரும் எடுப்பார்கள் என நம்புகிறேன்’’ என்றார் அவர்.
தமிழக பாஜகவில் அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து புதிதாக கட்சியில் சேருபவர்களை விட விலகிச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பாஜகவினரே சொல்கிறார்கள். பதவி கிடைக்கவில்லை, தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை உள்ளிட்ட காரணங்களால் தான் பெரும்பாலும் ஒரு கட்சியை விட்டு விலகி இன்னொரு கட்சியில் சேருவார்கள். ஆனால், தமிழக பாஜகவுக்கு குட்பை சொல்லிச் செல்பவர்கள் சொல்லும் காரணங்களும் அதற்கு பாஜக நிர்வாகிகள் தரும் விளக்கங்களும் விநோதமாகவே உள்ளது!