கூடலூர் அருகே இரண்டு புலிகள் உயிரிழப்பு: வனத் துறையினர் தீவிர விசாரணை

By KU BUREAU

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பிதர்காடு பகுதியிலுள்ள சசக்ஸ் என்ற இடத்தில், தனியார் தோட்டத்தில் புலிக் குட்டி இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பிதர்காடு வனச்சரகர் ரவி, கூடலூர் வன அலுவலர்வெங்கடேஷ் பிரபு மற்றும் வனத் துறையினர் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 4 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

மேலும், அந்தப் பகுதியைச் சுற்றி வனத் துறையினர் ஆய்வுசெய்தபோது, குட்டிப் புலி இறந்த இடத்திலிருந்து 75 மீட்டர் தொலைவில், 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்றும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இரு புலிகளின் உடல்களிலும் காயங்கள் இருந்தன. தொடர்ந்து, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் அங்கு சென்று, புலிகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகளை ரசாயனப் பரிசோதனைக்காக சேகரித்து அனுப்பிவைத்தார்.

இதுகுறித்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறும்போது, “புலிகள் இறந்த இடத்திலிருந்து 200 மீ. தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடப்பதும், அதன் உடலை புலிகள் சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இரு புலிகளும் விஷத்தால் இறந்திருக்க கூடும் என்றும் தெரிகிறது. அதாவது, விஷம் கலந்த உணவை சாப்பிட்ட காட்டுப்பன்றியை புலிகள் அடித்து சாப்பிட்டதால், அவை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக உதவி வனப் பாதுகாவலர் மற்றும் 2 வனச் சரகர்கள் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE