சென்னை: ‘துக்ளக்’ இதழின் நிறுவனரும், மூத்த பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி, கடந்த 2016-ம்ஆண்டு காலமானார். இதன்பிறகு, அவரது மனைவி சவுந்தரா ராமசாமி, சென்னையில் உள்ள இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சவுந்தரா ராமசாமி நேற்று காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்படுகிறது.
இன்று தகனம்: அங்கு தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு,பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் உடல் தகனம்செய்யப்பட உள்ளது. மறைந்த சவுந்தரா ராமசாமிக்கு ஸ்ரீராம் என்ற மகன், சிந்துஜா என்ற மகள் உள்ளனர்.
சவுந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘துக்ளக் நிறுவனரும், அப்பத்திரிகையின் ஆசிரியராக வும் இருந்து மறைந்த மூத்தபத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமியின் மனைவி சவுந்தராராமசாமி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்கிறேன்.
‘சோ’வுக்கு உறுதுணையாக... பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்த ‘சோ’வுக்கு உற்ற துணையாக இருந்த சவுந்தரா ராமசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித் துள்ளார்.
அதேபோல், தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரும் சவுந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.