மத்திய அரசு ‘யு-டர்ன்’ முதல் நெல்சன் மனைவியிடம் விசாரணை வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

நேரடி நியமன விவகாரம்: பின்வாங்கியது மத்திய அரசு: லேட்டரல் என்ட்ரி என்ற முறைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை ரத்து செய்யும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, யுபிஎஸ்சி தலைவருக்கு, மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய அமைச்சர் தனது கடிதத்தில், நேரடி நியமன செயல்முறையானது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சமத்துவம், சமூக நீதி, அதிலும் குறிப்பாக இடஒதுக்கீடு விதிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் உறுதியாக நம்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருப்பவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றாமல் அரசு பணிகளில் நியமனம் மேற்கொள்வது குறித்து கவலை தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது.

அதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசின் இந்தத் திட்டம், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிவாசிகள் மீதான நேரடியான தாக்குதல் என்று சாடியிருந்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கடுமையாக எதிர்த்த நிலையில், மத்திய அரசு தற்போது பின்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“மத்திய அரசின் யு-டர்னுக்கு எதிர்க்கட்சிகளே காரணம்” - காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் ஆட்சியின் கீழ் உள்ள மத்திய அமைச்சர், அரசியல் சாசன அதிகாரி ஒருவருக்கு தேதி குறிப்பிடாமல் எழுதியிருக்கும் கடிதம். என்னவொரு பரிதாபமான ஆட்சி. இருந்தாலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்வினையால் விளைந்த விளைவு இது என்பது தெளிவு” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எந்தச் சூழ்நிலையிலும் அரசியலமைப்பையும், இடஒதுக்கீட்டு முறையையும் காங்கிரஸ் பாதுகாக்கும். பாஜகவின் நேரடி நியமன முறை போன்ற சதிகளை எப்பாடுபட்டாவது முறியடிப்போம். நான் மீண்டும் கூறுகிறேன், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை உடைத்து, சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “இடஒதுக்கீட்டை நிராகரித்து யுபிஎஸ்சி மூலமாக நேரடி நியமனம் வழியாக பின்கதவு மூலம் நுழைய சதி செய்யப்பட்டது. இப்போது, பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கு முன் மத்திய அரசு அடிபணிந்துள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், “இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி நியமனங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார். அதேபோல், “சமூக நீதியை காக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில் என்எஸ்எஸ், என்சிசி, சாரணியர் இயக்கம், ஜேஆர்சி உள்ளிட்ட அமைப்புகளின் முகாம்களை நடத்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஆசிரியர்களின் பாதுகாப்பு இல்லாமல் எந்தவொரு அமைப்பு சார்பாகவும், மாணவ, மாணவிகளை முகாம்களில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

முதல்வரின் முதல் நிலை செயலராக உமாநாத் நியமனம்: முதல்வரின் முதல் நிலை செயலராக இருந்த நா.முருகானந்தம் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட நிலையில், அப்பொறுப்புக்கு பி.உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில், ‘முதல்வரின் முதல் நிலை செயலராக பி.உமாநாத், 2-ம் நிலை செயலராக எம்.எஸ்.சண்முகம், 3-ம் நிலை செயலராக அனுஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, முதல்வரின் முதல் நிலை செயலராக நா.முருகானந்தம் இருந்தபோது, அடுத்தடுத்த நிலைகளில் பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது..

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு புதன்கிழமை தொடக்கம்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முத்தமிழ் முருகன் மாநாடு ஏன்? - எல்.முருகன்: “பாஜகவுக்கு ஆதரவாக இந்துக்களின் வாக்கு வங்கி மாறிவிடுமோ என்ற அச்சத்தில் திமுக இப்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் முடிந்த திட்டங்களுக்கான அறிக்கைகள் அரசால் முறையாக சமர்ப்பிக்கப்படாததால் நிதி வழங்கப்படாமல் உள்ளது. அறிக்கைகள் அளித்தால் உடனடியாக நிதி வழங்கப்படும்,” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

‘மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிக்குழு’ - கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது ஓர் அடிப்படையான பிரச்சினை என்று தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார். வழக்கை விசாரித்து வரும் சிபிஐ வரும் வியாழக்கிழமை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

ட்ரம்ப்புக்கு எலான் மஸ்க் பதில்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, பதில் அளித்துள்ள எலான் மஸ்க் ‘சேவை செய்ய தயாராக இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, “ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

‘துக்ளக்’ சோ மனைவி சவுந்தரா ராமசாமி மறைவு: மறைந்த நடிகரும், ‘துக்ளக்’ இதழின் நிறுவனருமான சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் செல்போனில் பேசி இருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த விசாரணை குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘சந்தேக நபர்கள் அனைவரிடமும் விசாணை நடைபெற்று வருகிறது. அதில் யாருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு கூற இயலாது’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE