“இடைநுழைவு ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது சமூக நீதிக்கான வெற்றி” - முதல்வர் ஸ்டாலின்

By கி.கணேஷ்

சென்னை: “இடைநுழைவு ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது சமூக நீதிக்கான வெற்றி,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சில துறைகளில் வல்லுநர்களை நேரடி நியமனம் மூலம் உயர் பதவிகளுக்கு நியமித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “உயர்பதவிகளுக்கு நேரடி நியமனம் எனப்படும் ‘இடைநுழைவு ஆட்சேர்ப்பு’ என்பது சமூ கநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பதால் மத்திய அரசு இதனை கைவிட்டு நியாயமான பதவி உயர்வு வழங்குவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், இந்த இடைநுழைவு ஆட்சேர்ப்பு முறையை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. நமது இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப்பிறகு, இடை நுழைவு ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்யும் என்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக்குத் தன்னிச்சையாக விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம்,” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE