மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகிலுள்ள பெரியருவி அணைக்கட்டு வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் அணைக்கு நீர்வரத்தின்றி அதனை நம்பியுள்ள விளைநிலங்கள் தரிசாக மாறிவருகின்றன. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அணையையும் தூர்வாரி மழை நீரை சேமிக்க வழிவகுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள ஒரே அணைக்கட்டு (நீர்த்தேக்கம்) பெரியருவி அணைக்கட்டு கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான் பட்டியில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கக்கன் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது 1962ல் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். மூன்று மலைகளின் அடிவாரத்திலுள்ள நீர்த்தேக்கத்தில் சுமார் 23.6 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கலாம். இந்த அணையிலிருந்து சங்கிலித் தொடராக 26 கண்மாய்கள் உள்ளன.
சேக்கிப்பட்டி ஊராட்சியில் 1 கண்மாய், பட்டூர் ஊராட்சியில் 2 கண்மாய், கம்பூர் ஊராட்சியில் 9 கண்மாய், கேசம்பட்டி ஊராட்சியில் 14 கண்மாய் உட்பட 26 கண்மாய்கள் மூலம் சுமார் 678.60 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. தற்போது வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, தூர்ந்துபோன வரத்துக் கால்வாய்கள், அணைக்கட்டில் மண்மேவியதால் மழைநீர் தேக்க முடியாத சூழல் ஆகியவை காரணமாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இதனால் பாசன வசதி பெறும் கண்மாய்கள், விளை நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. காலதாமதமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி அணையை தூர்வாரி மழைநீரை சேமித்து விவசாயத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
» விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு கி.ரா விருது அறிவிப்பு
» மதுரை அருகே அபூர்வ அமைப்புடன் பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு!
இது குறித்து கேசம்பட்டி விவசாயி சி.ஜீவா கூறுகையில், "பெரியருவி நீர்த்தேக்கம் மூலம் சங்கிலித்தொடராக 26 கண்மாய்கள் மூலம் 600 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மறைமுகமாக 300 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகின்றன. சுமார் 15 ஆண்டுக்குப்பின் 2021-22-ம் ஆண்டில் அணை நிரம்பியது. பின்னர் 2 ஆண்டாக அணைக்கு மழைநீர் வரவில்லை.
வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீரின்றியும் உள்ளது. தற்போது பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூர்வார வேண்டும் என 5 ஆண்டாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரூ.2.2 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பியுள்ளோம் என பல ஆண்டாக தெரிவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" என்று விவசாயி ஜீவா கூறினார்.
இது குறித்து பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் கூறுகையில்,"விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியருவி அணைக்கட்டு நீர்த்தேக்கத்தை தூர்வார ரூ.2.2 கோடி மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். நிதி இருப்பின்றி திருப்பி அனுப்பிவிட்டனர். வரும் ஆண்டில் மீண்டும் கருத்துரு அனுப்பவுள்ளோம். அரசு நிதி வழங்கும் பட்சத்தில் பணிகள் தொடங்கும்" என்று அதிகாரிகள் கூறினர்.