மதுரை விமான நிலையத்தில் வாடகை வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் உயர்வு: ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் 

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் வாடகை வாகனங்களின் பார்க்கிங் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி வரும் வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 'பார்க்கிங்' கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம், மதுரை மாவட்ட சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.தினேஷ் தலைமை வகித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிஎம்.அழகர்சாமி துவக்கி வைத்தார். சிஐடியு மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் இரா.லெனின் நிறைவுரை ஆற்றினார். இதில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் இ.உதயநாதன், மாவட்ட துணைத்தலைவர் சரவணக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்பு மாவட்ட ஆட்சியர் மூலம் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'மதுரையில் விமான நிலையம் 50 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது. விமானத்தில் வரும் பயணிகளை ஏற்றிச்செல்லவும், வெளியிலிருந்து பயணிகளை விமான நிலையத்தில் இறக்கிவிடவும் இதுவரை 6 நிமிடம் 45 நொடிகள் இலவச நேரம் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது விமான நிலையத்தால் அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் விமான நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச் சென்றால் ரூ.135 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களில் உள்ளதுபோல் மதுரை விமான நிலையத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்லவும், இறக்கிவிட்டு செல்லவும் வாகனங்களுக்கு 20 நிமிடங்கள் இலவச நேரம் வழங்க வேண்டும். அதோடு பிக்கப் செய்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு கட்டணமில்லா நேரம் முடிந்த பின்னர் ஏற்கனவே உள்ள ரூ.20 என்ற கட்டணமே தொடர வேண்டும். புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்' எனக் கோரியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE