கொடைக்கானலில் தொடர் மழை: 2 மாதங்களாக நிரம்பி வழியும் வரதமாநதி அணை

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பழநியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பழநி, ஒட்டன்சத்திரம் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல், கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள பழநி அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதில் வரதமா நதி அணை (மொத்தம் 66.47 அடி) முழு கொள்ளளவை எட்டி கடந்த 2 மாதங்களாக நிரம்பி வழிந்து வருகிறது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அவை, அப்படியே வெளியேறி வருகிறது. அணை நிரம்பி அருவிப் போல் கொட்டும் தண்ணீரை பார்க்க உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பழநி பாலசமுத்திரம் அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் (மொத்தம் 65 அடி) 43.83 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1,339 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில், வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குதிரையாறு அணையின் நீர்மட்டம் (மொத்தம் 79.99 அடி) 67.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி வரும் தண்ணீரில் 7 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையின் நீர்மட்டம் (மொத்தம் 90 அடி) 66.88 அடியாகவும், இடையகோட்டை நங்காஞ்சியாறு அணையின் நீர்மட்டம் (மொத்தம் 39.37 அடி) 20.87 அடியாக உள்ளது. மழை பெய்து வருவதால் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE