பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி இன்று செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு): "தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிரந்தரப் படுத்த வேண்டும், பிரிவிற்கு இரண்டு பேரை கள உதவியாளராக ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், அரசு உத்தரவுக்கு எதிராய் நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தக்கூடாது,

பல ஆண்டுகளாக மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் மற்றும் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக தாம்பரம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோட்ட தலைவர் டில்லி தலைமையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் செங்கல்பட்டில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளை செயலாளர் தேவகுமார் தலைமையில் நடைபெற்றது. மின்வாரியத்தில் சுமார் 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரப் படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய மின்வாரிய நிர்வாகம் மறுத்து வருகிறது. கஜா, தானே, ஒக்கி போன்ற புயல்கள் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மின் விநியோகத்தை சீரமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்கி அரசுக்கு இவர்கள் பெருமை சேர்த்தவர்கள்.

மழை, வெயில் என பாராமல் உற்பத்தி நிலையங்களில் எரியும் நிலக்கரியின் வெப்பத்துக்கு நடுவே பணியாற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பணியிலும், மனிதர்கள் நடமாட முடியாத மலை பிரதேசமான காடம்பாறை, குந்தா, கோதையாறு, பாபநாசம் உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி வட்டங்களிலும் மின் தொடரமைப்பு மற்றும் பொதுக் கட்டுமான பகுதிகளிலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடுமையாக பணியாற்றியது மட்டுமின்றி, பணி நிரந்தரம் கோரி பல கட்டங்களாக மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இவர்கள் பயனடையும் வகையிலேயே அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE