தாமிரபரணியில் வெள்ளத்துக்குப் பின் உயிரிழப்புகள் அதிகரிப்பு!

By KU BUREAU

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப்பின், நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்துள்ள தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 7 மாதங்களாக தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் சிலர் நீரில் மூழ்கி உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்குமுன் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே தாமிரபரணி ஆற்று தடாகத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தின் உச்சமாக இருந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தாமிரபரணியில் நேற்றுமுன்தினம் குளிக்க சென்றவர்களில் 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் பேட்டையை சேர்ந்த தக்கரை பீர்முகமது மகன் ரகுமான் (26) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது சடலத்தை தீயணைப்பு படையினர் நேற்று மீட்டனர்.

இவ்வாறு அடிக்கடி தாமிரபரணி ஆற்றில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதற்கு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணிகளில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி கூறியதாவது:

சமீபத்திய வெள்ளம் தாமிரபரணி நதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளமான, ஆழமான இடங்களில் வெள்ளம் அரித்து வந்த பூமணலை ஆழமான பகுதிகளில் கொட்டியுள்ளது. இதில் இறங்கினால் ஆபத்து. இதை சொரி மணல் என்பர். அதோடு மேடான பகுதிகளில், வெள்ளம் இழுத்து வந்த செடி,கொடி துணி களின் தேக்கம் காரணமாக புதிய பள்ளம் ஆழமான பகுதிகளை நதியில் உருவாக்கி உள்ளது.

நதியைப் பற்றி நன்கு பழக்கப்பட்டர்கள், குறிப்பாக மீன்பிடிப்பவர்கள் கூட தடுமாறிவிடுகின்றனர். காரணம், வெள்ளத்துக்கு முன் மேடாக இருந்த பகுதிகள், வெள்ளத்துக்கு பின்னர், ஆழமான பகுதியாக மாற்றியுள்ளது.

குறிப்பாக நதியில் திரும்புகிற இடம், நதியில் கற்பாங்கான இடம், உறைகிணறு கள் உள்ள இடம், நதி தேக்கமான இடம், அணைக்கட்டு பகுதிகள் ஆகியவை வெள்ளத்துக்கு பின் உயிரிழப்புகள் அதிகம் நிகழும் பகுதியாக மாறியிருக்கிறது. மேலும் மது அருந்திவிட்டு ஆற்றில் குளிப்பதால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

நீரில் மூழ்குவோரை காப்பற்றப் போனவர்களும், பயத்தினால் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, நதியில் ஆழமான மற்றும் விபத்து அபாயமுள்ள பகுதிகள் குறித்து, தங்கள் பகுதிக்கு வரும் வெளியூர்க்காரர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் உள்ளூர் கிராம மக்கள் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும் இது குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளையும் ஆங்காங்கே வைக்க அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE