ஆட்களை வைத்து மிரட்டும் அரசு மருத்துவர் - தென்மண்டல ஐஜியிடம் காரைக்குடி பெண் புகார்

By என்.சன்னாசி

மதுரை: ஆட்களை வைத்து மிரட்டுவதாக அரசு மருத்துவர் மீது காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் தென்மண்டல ஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள மாத்தூரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்காவிடம் கொடுத்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: "எனது மகன் சுப்பிரமணி காரைக் குடியில் தனியார் மொபைல்ஸ் கடை, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிறார். தவறாமல் வருமான வரி செலுத்துகிறார். எனது மகனுக்கு குமரேசன் என்ற மருத்துவரிடம் நட்பு இருந்தது. குமரேசன் தனியார் மருத்துவமனை கட்டி மருத்துவராக பணிபுரிகிறார். அதுமட்டுமின்றி திமுகவில் பொறுப்பு வகிக்கிறார்.

இவர் சில மாதமாக மருத்துவமனையின் கணக்குகளை சரியாக ஊழியர்கள் ஒப்படைக்கவில்லை, அதில் கையாடல் நடப்பதாக எனது மகனை சந்தித்து உதவி கேட்டுள்ளார். எனது மகனும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி இருக்கிறார். இருப்பினும், கையாடலில் தனது உடன் பிறந்த அண்ணன் உடந்தையாக இருக்கலாம், அவர் அரசு மருத்துவராக இருப்பதால், காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளதால் ஆதாரமின்றி புகார் அளிக்கவேண்டாம் என குமரேசன் கூறியுள்ளார்.

இச்சூழலில் மருத்துவமனையில் வைத்து கணக்குகளை சரிபார்த்த பிறகு புகார் அளிக்கலாம் என, எனது மகன் கூறியபோது, அதை தவிர்த்து அரியக்குடியில் உள்ள எனது மகனுக்கு சொந்தமான வீட்டில் வைத்து கணக்கு விவரம் குறித்து ஆய்வு நடந்தது. அப்போது, மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் வந்த நிலையில், அவரது முன்னிலையில் ஆய்வு செய்ய வேண்டாம் என கிளம்பி சென்றுள்ளனர்.

இது பற்றி அறிந்த குமரேசன் அண்ணன், அவர் சார்ந்த ஆட்களை அனுப்பி நள்ளிரவில் குமேரசனை தாக்கியது கூறப்படுகிறது. இருப்பினும், எனது மகன் குமரேசனை தாக்கி ரூ.1 கோடி கேட்டதாக காவல்துறையில் குமரேசன் புகார் அளித்துள்ளார். மருத்துவமனை பெண் ஊழியர் உதவியுடன் எனது மகன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எனது மகன் மற்றும் அவரது கடை ஊழியர்களை தொடர்ந்து மிரட்டுகின்றனர்.

மகனின் விலை உயர்ந்த 3 கார்களை எடுத்து சென்றுவிட்டனர். மருத்துவர்கள் இருவரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸ் ரவுடிகளின் துணையோடு செயல்படுகின்றனர். புகாரின் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE