நகைக்காக பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை: திருவாரூரில் 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: நகைக்காக பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் அருகே, உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவர் வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரபாவதி (40). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று இரவு (18ம் தேதி) நகைக்காக மர்ம நபரால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, திருவாரூர் எஸ் பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொலை நடந்த 12 மணி நேரத்தில் இளவங்கார்குடி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த கேபிள் வேலை செய்யும் இளைஞரான சந்தோஷ் (20) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பிரபாவதி வீட்டில் சம்பவத்தன்று காலை கேபிள் வேலை செய்த சந்தோஷ், கொள்ளை அடிக்க திட்டமிட்டு, இரவு 9 மணிக்கு பிரபாவதி வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு கதவு தாழ்ப்பாள் போடாமல், பிரபாவதி சமையலறையில் வேலை பார்த்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ் உள்ளே நுழைந்துள்ளார். அவரை பார்த்த பிரபாவதி, வெளியே போகச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தோஷ் போர்வையை எடுத்து, பிரபாவதியின் முகத்தில் மூடி தாக்கியுள்ளார். இதனையடுத்து பிரபாவதி அங்கிருந்த கத்தியை எடுத்து சந்தோஷை தாக்க முற்பட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், கத்தியை பிடுங்கி பிரபாவதியை சரமாரியாக குத்தியதில் பிரபாவதிக்கு கழுத்து அறுபட்டு ரத்தம் குபீர் குபீரென வந்துள்ளது. இதனையடுத்து சந்தோஷ் தலையணையை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் அமுக்கியதில், பிரபாவதி உயிரிழந்துள்ளார். அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தாலிச் செயின் மற்றும் இதர நகைகளையும், கொலுசு போன்றவற்றை திருடிக் கொண்டு அவரது செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தனது மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக சென்ற சந்தோஷ், பிரபாவதியின் மொபைலில் அவரது சிம்மை மாற்றியுள்ளார். பிரபாவதி மொபைலின் இஎம்ஐ நம்பர் மூலம் சந்தோஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரை கொலை நடந்த பன்னிரெண்டு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினரை திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE