லேட்டரல் என்ட்ரியை கைவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்புங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By கி.கணேஷ்

சென்னை: "லேட்டரல் என்ட்ரி" என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பதால் மத்திய அரசு இதனை கைவிட்டு நியாயமான பதவி உயர்வு வழங்குவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "சமூக நீதியை நிலைநாட்டவும் இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சில நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதி மிக்க பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப்பறிப்பதாகும்.

மத்திய அரசு இதை கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயமான சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தொடக்கத்தில் இருந்தே தாங்கள் எதிர்த்து வரும் கிரீமி லேயர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பை இனியும் தாமதிக்காமல் உயர்த்த வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக நாடு முழுவதும் சாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE