பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

By காமதேனு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப் 12-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வருமாறு ஆளுநர் ரவிக்கு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

நடப்பு 2024-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் பிப் 12-ம் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பது மரபு. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

திமுகவுக்கும், ஆளுநர் தரப்புக்கும் முட்டல், மோதல் நிலவிவரும் நிலையில் நடைபெற உள்ள கூட்டத் தொடருக்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மரபுகளை மதித்து திமுக, ஆளுநரை தற்போது அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் பிப். 12-ம் தேதி தொடங்கவுள்ளது. பிப்.19-ம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) முன் பண செலவு மானிய கோரிக்கையை பிப்.20-ம் தேதியன்றும், 2023-24- ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையை பிப். 21-ம் தேதியன்றும் நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.

பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE