உதகை, திருப்பூரில் கொட்டி தீர்த்த கன மழை

By KU BUREAU

திருப்பூர் / உதகை: திருப்பூர், உதகையில் கொட்டி தீர்த்த கன மழையால், பேருந்து நிலைய பணிமனை, சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்துக்கு முன்பு வரை தொடர் மழை பெய்து வந்தது. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு நிலை முற்றிலும் முடங்கியது.

இதேபோல், மின்கம்பங்கள் பல இடங்களில் விழுந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நாளை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை உட்பட 12 மாவட்டங்களில் மழை பாதிப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால், மாறாக கடந்த 4 நாட்களாக வெயிலான காலநிலை நிலவியது. வார இறுதி நாளான நேற்று முன்தினம் சுற்றுலா தலங்கள் களைகட்டின. இந்நிலையில், நேற்று மதியத்துக்கு பின்னர் திடீரென காலநிலை மாறி, உதகை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் கன மழை பெய்தது.

உதகை கோடப்பமந்து கால்வாயில் சாக்கடை நீர் கலந்து வந்து, பேருந்து நிலையம் அருகே ரயில்வே பாலத்தில் தேங்கி நின்றது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், பேருந்து நிலையம் அருகில் பணிமனையை ஒட்டி கால்வாய் செல்வதால், அங்கிருந்து கழிவுநீருடன் கலந்து மழை நீர் போக்குவரத்து பணிமனைக்குள் புகுந்தது.

தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால், உதகை கிளை 1, கிளை 2-ல் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். சில பேருந்துகள் வாராந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றன. தொடர் மழை பெய்யும் காலங்களில் பணிமனைக்குள் மழை நீர் வருவது ஊழியர்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்குகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தொட்டபெட்டா அருகே குந்தசப்பை பகுதியில் சாலையோரம் தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல், மார்க்கெட் கடைகளுக்குள்ளும், தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. உதகை சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையால், மாநகரில் ராயபுரம், ஷெரீப் காலனி, பாளையக்காடு, வெள்ளியங்காடு, ஆண்டிபாளையம், மங்கலம், அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தோடியது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பிச்சம்பாளையம், உழவர் சந்தை குடியிருப்பு பகுதி, நெசவாளர் காலனி தொடங்கி புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அவிநாசி வட்டம் சேவூர், காங்கயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE