சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ. ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ 2015-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.5.53 கோடி சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிட்., மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ,ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரி ஆ.ராசா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
» பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மேலும் 4 பேர் கைது
» பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: நீதி கேட்டு பாப்பாநாட்டில் கடையடைப்பு