தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு வர்த்தகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். மேலும், அனைத்துக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில்கடந்த 12-ம் தேதி 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம்பெண்ணை 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பாப்பாநாடு கடைத்தெருவில் அனைத்துக் கட்சி சார்பில்நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரைக் கைது செய்ய வேண்டும். பாப்பாநாடு பகுதியில் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்தி, குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரங்கசாமி, சரவணன், பாஸ்கர், வர்த்தக சங்கத் தலைவர்சந்திரசேகர், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் திமுக, அதிமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெண் எஸ்.ஐ பணியிடை நீக்கம்: பாதிக்கப்பட்ட பெண் அளித்தவாக்குமூலத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது தொடர்பாக சம்பவம் நடந்த கடந்த 12-ம் தேதி பாப்பாநாடு காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சூர்யா, புகார் மனுவை பெறாமல், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி வழங்காமல், அவரை அலைக்கழித்ததுடன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, அவரை தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பிஆஷிஷ்ராவத் கடந்த 17-ம் தேதிஉத்தரவிட்டிருந்தார். இந்நிலை யில், உதவி ஆய்வாளர் சூர்யாவை பணியிடை நீக்கம் செய்து தஞ்சா வூர் சரக டிஐஜி ஜியா உல்ஹக் நேற்று உத்தரவிட்டார்.