பாஜக கூட்டணிக்கு யார் சென்றாலும் எதிர்க்கும் அணியில் மார்க்சிஸ்ட் இருக்கும்: மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

By KU BUREAU

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: திமுக கூட்டணிக் கட்சிகளை பொறுத்த வரை ஆளுநர் மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளோம்.

நாங்கள் திமுகவுடன் தேர்தல் ரீதியாகவும், கொள்கை அளவிலும் கூட்டணியில் உள்ளோம். ஆளுநரின் தேநீர் விருந்துக்கு செல்வது, நாணயத்தின் வெளியீட்டு நிகழ்வில் ராஜ்நாத் சிங் பங்கேற்பது போன்ற நிகழ்வுகள் அரசு சார்பிலானவை.

என்னதான் விருந்துக்கு சென்றாலும், ராஜ்நாத் சிங்கை அழைத்தாலும் தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஏற்படாது. பாஜக தன்னை கொள்கை ரீதியாக மாற்றிக் கொள்வதற்கும் எந்த வழியும் இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட உடனடியாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு, தமிழக அரசு கேட்கும் நிதியை கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசை பொறுத்தவரை, தமிழக அரசையும், தமிழக மக்களையும் புறந்தள்ளுகிற போக்கில் எந்தமாற்றமும் இல்லை.

அதனால், பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது. திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிக்கிறோம். மக்கள் விரோத போக்கை கடுமையாக எதிர்க்கிறோம். பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கும் கூட்டணியில் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE