சென்னை: கூட்டணி கட்சிகளை கைவிட்ட ஸ்டாலின், குடும்ப நலனுக்காக மத்திய பாஜக அரசுடன் நெருக்கம் காட்டுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அதே முதல்வர், மீண்டும் பாஜகஆட்சிக்கு வந்தவுடன் தன்ஆட்சியை காப்பாற்ற பாஜகவின்மூத்த மத்திய அமைச்சரை அழைத்து விழா நடத்தி உள்ளார்.இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்று நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்?
நாணயம் வெளியிட்டு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது. விழா அழைப்பிதழின் எந்த இடத்திலும் மத்திய அரசுதுறையின் பெயர் இடம்பெறவில்லை. எனவே ராகுல் காந்தி, சோனியா காந்தி அல்லது மல்லிகார்ஜுன கார்கேவை கூட நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம். அந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மேடையில் இடம் இல்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், 2024மக்களவைத் தேர்தல் வரையிலும், இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்துக்கும் கூட்டணி கட்சிகள் தேவைப்பட்டன. இனி கூட்டணி கட்சியினரின் தயவுதேவையில்லை. குடும்ப நலன்முக்கியம் என்றவுடன் தனது சுயரூபத்தை ஸ்டாலின் வெளிக்காட்டியுள்ளார்.
காமராஜர் மறைந்தபோது, அவருக்கு கடற்கரையில் நினைவிடம் கட்ட கோரிக்கை எழுந்தது. முன்னாள் முதல்வர்களுக்கு எல்லாம் கடற்கரையில் நினைவிடம் கிடையாது என்று கோப்புகளில் எழுதியவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. நாங்கள் அதே வசனத்தை திருப்பி போட்டு, இரவோடு இரவாக கருணாநிதி நினைவிடத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழி வந்தவர்கள்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தனது மகன், மருமகளை காப்பாற்றவும், புகார்களில் சிக்கியுள்ள தனது மருமகன் மற்றும் சில மந்திரிகளை காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அதிமுகவுக்கு எந்தகவலையும் இல்லை. தன்னுடைய கபட நாடகம் என் மூலம் வெளிப்பட்டு விட்டதே என்ற கோபத்தில் வானத்துக்கும், பூமிக்கும் தாவி குதிக்கிறார்.
மத்தியில் 2004 முதல் 2013 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார். தமிழகத்தில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் தயவால் ஆட்சி நடத்தினார். தற்போது காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் மறந்துவிட்டார். டெல்லியை மகிழ்வித்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.