பாஜகவுடன் ரகசிய உறவுக்கு அவசியம் இல்லை; நமது உரிமையை ஒருநாளும் விட்டுத்தர மாட்டோம் - முதல்வர் ஸ்டாலின்

By KU BUREAU

சென்னை: ‘பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கான உரிமையை ஒருநாளும் விட்டுத்தர மாட்டோம்’ என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாணயம் வெளியீட்டுக்காக வந்த, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நினைவிடத்தை பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அனைத்தையும் பார்த்துவிட்டு இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உரை உள்ளபடியே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசினால் எப்படிபேசுவார்களோ அதைவிட அதிகமாக, திமுக-வினர் பேசுவதைவிட சிறப்பாக இருந்தது.

இதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாணயம் இந்தியில் உள்ளது. தமிழில் இல்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். முதலில் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். நாட்டின் நடப்பு புரிந்திருக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி மத்திய அரசு மூலம் நடைபெறும் நிகழ்ச்சி. ஏற்கெனவே, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட பலருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்து தலைவர்களுக்கும் மத்திய அரசு நாணயம் வெளியிடும்போது, இந்தியில் எழுதி, அதன்பின் ஆங்கிலத்தில் எழுத்துகள் அமைந்திருக்கும். ஆனால் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடும்போது, அண்ணாவின் தமிழ் கையெழுத்தை கருணாநிதி அதில் இடம்பெறச்செய்தார்.

அதுபோல்தான், கருணாநிதியின் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இதைக்கூட அவர் பார்க்கவில்லை. மேலும், ‘ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை’ என கேட்கிறார். கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது மத்திய அரசு. அதனால்தான் மத்திய அமைச்சரை அழைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம்.

எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிட்டபோது, மத்திய அரசில் இருந்து யாரும் வரவில்லை. பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால், மத்திய அரசு பழனிசாமியை மதிக்கவில்லை. இன்றுநாம் அழைத்ததும், தட்டாமல் மத்திய அமைச்சர் வந்தார். அதுதான் திமுகவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள சிறப்பு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கும் அதிமுகவினர், இதுவரை ஒரு இரங்கல் கூட்டமாவது ஜெயலலிதாவுக்கு நடத்தினார்களா, இவர்களுக்கு கருணாநிதியின் விழாவை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுடன் நாம் உறவு வைத்துள்ளதாக செய்தியை கிளப்பிவிட்டுள்ளனர். நாங்கள் ரகசிய உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியமே இல்லை.

கருணாநிதியை பொறுத்தவரை எதிர்த்தாலும் கொள்கையுடன் எதிர்ப்பார், ஆதரித்தாலும் கொள்கையுடன் ஆதரிப்பார் என்று இந்திரா காந்தியே கூறியுள்ளார். எங்களுக்கு அது ஒன்றே போதும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் போட்டுள்ள தீர்மானத்தை பழனிசாமி முதலில் படிக்க வேண்டும். பழனிசாமிபோல் ஊர்ந்து, பதுங்கி சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரியமரியாதையை நாங்கள் கொடுப்போம். அதற்காக நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன், நமக்கென்று இருக்கக் கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுத்தர மாட்டோம். இவ்வாறு பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE