'#தலைவர் விஜய்'... ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

By காமதேனு

நடிகர் விஜய் அரசியல் வருகை உறுதி என்று கூறப்பட்டுள்ள நிலையில் #தலைவர் விஜய் என்ற ஹேஷ்டாக்கை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதற்கான பணிகளை கடந்த சில வருட காலமாகவே செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஒரு வருட காலமாகவே அரசியல் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர் மன்றங்கள், மக்கள் இயக்கமாக முறைப்படி பதிவு செய்யப்பட்டு மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் அளவில் நிர்வாகிகள் நியமனம், வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகள் அமைப்பது என கட்சி ரீதியான அமைப்பை உருவாக்கி, பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த அவர் கட்சியை தொடங்கி அதை முறைப்படி பதிவு செய்ய கையெழுத்துகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக முன்னேற்ற கழகம் என்று கட்சியின் பெயர் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. அரசியல் கட்சிக்கு தயாராக இருக்குமாறு அவரது தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் '#தலைவர் விஜய்' என்று அவரது அரசியல் வருகையை கொண்டாடும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கி அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இன்று காலை முதல் ட்விட்டரில் '#தலைவர் விஜய்' ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தங்கள் தலைவனின் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலேயே விஜயின் பங்கு இருக்குமா என்ற கேள்வி தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE