சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் ஏராளமானவர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில், 35 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியினரின் 6 வாக்குகள் செல்லாதவை எனக் கூறி, பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று மேயர் பதவியை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் முறைகேடு நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் வீடியோ ஆதாரம் வெளியிட்டு குற்றம் சாட்டியது
இந்த முறைகேட்டுக்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “இவ்வளவு சிறிய தேர்தலுக்காக பாஜக மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலேயே இப்படி என்றால் மக்களவைத் தேர்தலில் எந்த அளவிலான தேர்தல் முறைகேடுகளைச் செய்வார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அழைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை முதலே டெல்லியில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மாநில போலீஸாரும் அதிக அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.