சிக்கனில் கண்ணாடி துகள்கள் கிடந்த விவகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல அசைவ ஹோட்டலுக்கு அபராதம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிக்கனில் கண்ணாடி துகள்கள் கிடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை செய்தனர். கெட்டுப்போன 6 கிலோ சிக்கன், அழுகிய முட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள் ஹோட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முகமது பாரித் என்பவர் மதுரை சாலையில் உள்ள ஆசிப் பிரியாணி ஹோட்டலில் பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கி உள்ளார். வீட்டுக்கு சென்று சிக்கனை சாப்பிட்ட போது, வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. சிக்கன் துண்டுகளை பார்த்தபோது, அதனில் உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏராளமாக கிடந்துள்ளது.

இது குறித்து முகமது பாரித் கடைக்கு சென்று ஊழியர்களிடம் கேட்டபோது, "சமையல் அறையில் கண்ணாடி பாட்டில் விழுந்து உடைந்த போது, மசாலா பாத்திரத்திற்குள் கண்ணாடி துகள்கள் தெரியாமல் விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

இது குறித்து முகமது பாரித் உணவுப் பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று பிற்பகலில் ஆசிப் பிரியாணி ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப்போன 6 கிலோ சிக்கன் மற்றும் 50 அழுகிய முட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில்: "ஹோட்டலில் ஆய்வு செய்து கெட்டுப்போன 6 கிலோ சிக்கன், 50 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. சந்தேகத்திற்குரிய 5 மசாலா பொருட்களின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஹோட்டலுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது" என்று ராஜேந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE