ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சம் மோசடி - போலி நிதி நிறுவனம் மீது புகார்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த போலி நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் உப்பூரைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (35). இவர், தனது குடும்பத்தினரிடம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செயல்பட்டு வந்த போலி நிதி நிறுவனம் ரூ.25 லட்சம் மோசடி செய்துவிட்டதாக இன்று (ஆக.19) ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். பின்னர் வழக்கறிஞர் திருமுருகன் தலைமையில் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷிடம் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

இது குறித்து லிங்கேஸ்வரன் கூறியதாவது, "நான் உப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறேன். எனக்கு பணத் தேவை இருந்தது. இதையறிந்த எனக்கு பழக்கமான தேவகோட்டையைச் சேர்ந்த அருண்குமார் தான் நிர்வாக இயக்குநராகவும், விஜயராகவன் சேர்மனாகவும், கோயமுத்தூர் மாவட்டம் கோவை இளங்கோ நகரைச் சேர்ந்த துரை ராஜ், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குளத்தூரைச் சேர்ந்த அர்ஜூனன், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஊர்ணங்குடியைச் சேர்ந்த கார்த்தி, அருள் ஜெயராஜ் ஆகியோர் இயக்குநர்களாகவும் கொண்ட, நிதி நிறுவனத்தில் (ட்ரூவே பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்) முதலீடு செய்யக் கூறினர்.

அதற்கு மாதம் 4 முதல் 5 சதவீதம் வட்டியும், 20 மாதங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக தருவாதகவும் கூறினர். அதனடிப்படையில் கடந்த 2022 முதல் 2023ம் ஆண்டு வரை நான் ரூ.15 லட்சம், எனது தாய் முத்துமாரி பெயரில் ரூ.3 லட்சம், எனது சகோதரர்கள் அய்யனார் ரூ.3 லட்சம், விஸ்வநாதன் ரூ.3 லட்சம், எனது மனைவி ராஜாத்தி ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் முதலீடு செய்தோம். ஆனால் முதலீடு பெற்றது முதல் எந்த தொகையும் எங்களுக்கு அவர்கள் வழங்கவில்லை.

இதன்பின்னர் இவர்கள் போலியான நிறுவனம் நடத்தி எங்களை மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பின் முதலீடு தொகையை திருப்பி கேட்டால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரித்து கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர். எங்கள் பகுதியில் மட்டும் இவர்கள் ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே என்னையும், எனது குடும்பத்தையும் மோசடி செய்த அருண்குமார் உள்ளிட்ட 6 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத்தர எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று லிங்கேஸ்வரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE